சென்ற பாடங்களை படித்தவர்களுக்கு சித்த வித்தையின் அடிப்படை நோக்கம் விளங்கியிருக்கும். பொதுவாக நாம் ஸ்தூலத்திலுள்ளவற்றையே உண்மையென நம்பி வாழ்கிறோம், ஆனால் ஸ்தூலத்தையும் தாண்டி எமது ஸ்தூல புலன்களுக்கப்பால் இருக்கும் சக்திகளால் நாம் கட்டுப்படுத்துவதையும் உணர்கிறோம். அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது என்ற ஆய்வில் மனிதன் கண்ட இருதுறைகள்தான் ஆன்மவிஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம்.
பௌதீக விஞ்ஞானம் புறவயச் சூழலை ஆராய்வது, ஆன்ம விஞ்ஞானம் அகச்சூழலை ஆராய்வது. ஆன்ம விஞ்ஞானத்தின முதல் நோக்கம் தன்னையறிதல் மூலம் தலைவனை அறிதல் என்பதாகும். ஆதலால்தான் அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்தில் உண்டு என சித்தர்கள் சொல்லிவைத்தார்கள். ஆகவே சித்த வித்தையினை, அதன் செயற்பாட்டினை தெளிவாக விளங்கி, அதன் வரைமுறைகள், பிரயோகங்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ள முதலாவது நாம் மனிதராகிய எம்மைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.
- மனிதன் தனது அமைப்பினை அறிந்துகொள்ள சில விதிகளை புரிந்துகொள்ளவேண்டும்.
- எந்தவொரு பொருளும் அதன் அமைப்பில் சூக்ஷ்மம், ஸ்தூலம் என இரு இருப்பைக் கொண்டிருக்கும்.
- எந்தப்பொருளும் சூக்ஷ்மத்திலிருந்தே ஸ்தூலதன்மைக்கும் வரும்.சூக்ஷ்மத்தில் இல்லாத எதுவும் ஸ்தூலத்தில தோன்றாது.
- இவற்றுக்கிடையிலான இணைப்பு பிராண சக்தி எனும் உயிர் சக்தியால் உருவாக்கப்படுகிறது.
மேற்குறித்த விதியின் படி மனிதனது அமைப்பு கீழ்வரும் படத்தில் உள்ளவாறு காணப்படும்.
ஆக சித்த வித்தையின் படி மனிதனின் சூஷ்மம் ஸ்தூலம் இரண்டை பற்றியும் அறிதல் வேண்டும். மேற்கூறிய படத்தில் குறிப்பட்ட விடயங்களை சித்தர்களது நூற்களில் பஞ்ச கோசம், அந்தக்கரணம் எனும் சொற்கள் மூலம் அறியலாம். பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுபவர்கள் இவற்றை எது தனிப்பட அடுக்குகளாக இருப்பதாக கூறியிருப்பதை காணலாம், சூஷ்ம உடலின் கூறுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. தனிப்பட அடுக்குகளாக (layers) இருப்பதில்லை.
மேலே கூறப்பட்டதன் படி சூஷ்மத்தினை எமக்கு கட்டுப்படுத்தும் சக்தி வந்தால் ஸ்தூலம் தானாக கட்டுப்படும் என்பதே அனைத்து சாதனைகளினதும் குறிக்கோளாகும்.
இந்த அடிப்படையின் படி பிராணன் தான் ஸ்தூலத்திற்கும் சூஷ்மத்திற்கும் இடையிலான பாலமாகும். பிராணனுடன் கலந்துதான் ஸ்தூல சூஷ்ம உடல்கள் நன்மையோ தீமையோ பெறுகின்றன.
நன்மையையும் தீமையும் எவை என்பதனை அந்தக் கரணங்கலான மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் தீர்மானிக்கின்றன.
உதாரணம் மூலம் விளங்குவதானால் கணணி ஒன்றில்
- வெளியே தெரியும் கணணி (Computer hardware) - ஸ்தூல உடல்
- அதிலுள்ள அசம்பிளி லாங்குவேஜ் (Assembly language) - அகங்காரமும் ஆன்மாவும் கலந்த நான் எனும் உணர்வு .
- புரோகிராமிங் லொஜிக் (Programming logic) - புத்தி
- விண்டோஸ் புரோகிராம் (Windows program) - சித்தம் ஆகிய ஆழ்மனம்
- மொனிட்டர் (monitor) - புறமனம்
இந்த அடிப்படையினைப் பற்றிய மேலதிக விளக்கங்களை தகுந்த இடங்களில் பார்ப்போம்.
அடுத்த பாடத்தில் எந்த சாதனைக்கும் முக்கியமான மனதினை சுத்தி செய்யும் சாதனை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:
நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்
No comments:
Post a Comment