Sunday, May 5, 2013


சென்ற பாடத்தில் கூறப்பட்டதின் படி சூஷ்மத்திலுள்ள உங்களுக்கு விருப்பமான ஒரு குருவினை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவ்வாறாயின் அவரது பெயரிற்கு முன்னால் "ஓம்" சேர்த்து இறுதியில் 'நமஹ/போற்றி" சேர்த்து அதனை ஒரு எளிய மந்திரச் சொல்லாக்கிக் கொள்ளவும். உதாரணமாக "ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ" என்றவாறு உருவாக்கிக்கொண்டு அவரது படத்தினையோ, தீப ஒளியினையோ ஒரு இடத்தில் நிரந்தரமாக கண்பார்வை மட்டத்தில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். குறித்த இடம்  வீட்டின் பூஜை அறையில் அல்லது சுத்தமான ஒரு சிறு இடத்தில் இடம் ஒதுக்கிக் கொள்ளவும், அந்த இடம் வேறு எந்தப் உபயோகத்திற்கும் இல்லாததாக இருத்தல் வேண்டும். அந்த இடம் நீங்களும் குருநாதரும் தொடர்பு கொள்வதற்கான இடமாக மட்டும் இருக்கவேண்டும்.

பின்பு குறித்த நேரத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணை மூடி சில வினாடிகள் மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு (வேறு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்) குருநாதரின் உருவத்தையோ அல்லது தீப ஒளியினையோ பார்த்தவண்ணம் நாமத்தினை ஐந்து நிமிடமோ அல்லது 108 தடவையோ மனதில் உச்சரித்த வண்ணம் (முடியாவிட்டால் ஆரம்பத்தில் சத்தமாக உச்சரித்து பின் மானசீகமாக செய்யவும்) அவருடன் அன்பு கலந்த பார்வையாக செலுத்தவும். மனதில் எமக்கு விருப்பமான ஒருவரை வரவேற்க எப்படி காத்திருப்போமோ அந்த உணர்ச்சி பாவத்தில் இருக்கவும். இப்படி நாமத்தினை உச்சரித்து முடித்தவுடன் மனதில் அன்புடன் கீழ்வரும் பொதுவான பிரார்த்தனையினை மனதால் வேண்டவும் "குரு நாதா எனது செயல்களுக்கு காரணமான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன், அவற்றை நல்ல அதிர்வுடையவை ஆக்கி உங்களுடன் எப்போதும் இணைந்தவையாய் எப்போதும் நானும் நீங்களும் ஒன்றே என நிலையில் எனது மனமும் செயலும் நல்லதாகிடவும், என்னிலும், என்னைச் சூழவாழ்பவர்கள் வாழ்விலும், குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும், பூமியிலும் அன்பு, ஆனந்தம்,ஞானம், செல்வம் நிறைந்து ஒத்திசைவாய் வாழ அருள் புரியவேண்டும்" என மூன்று முறை பிரார்த்திக்கவும்.

இதன் பின்பு உங்களது உடனடித்தேவையான தனிப்பட்ட பிரார்த்தனை ஒன்றை மட்டும் செய்யவும், குறித்த ஒன்று நிறைவேறும் வரை அந்த ஒரு பிரார்த்தனையினை மட்டுமே செய்யவும், உதாரணமாக " எனது தகுதிக்கும் ஆற்றலிற்கும் தக்க வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் குருதேவா" என்று பிரார்த்திக்கவும். இதற்கு பின்னர் கண்ணைத்திறந்து சில நிமிடங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவதானித்து வாருங்கள். முதலில் தோன்றும் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வரவும். 

தனிப்பட்ட வேண்டுதலிற்கு ஒரு காரியம் நிறைவேறிய பின் மற்றைய காரியத்தினை பிரார்த்திக்கவும்.  நிதானமாக சிந்தித்து உங்கள் தேவைகளை வரிசைப்படுத்தி முக்கியமானதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொது நிச்சயமாக வெற்றி பெறுவதுடன் உங்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும்.

தொடங்குவது ஒரு வியாழக்கிழமையாக இருத்தல் நல்லது.

இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்து வரவும். இந்த பயிற்சி வாழ்நாள் பயிற்சியாக இருக்கட்டும். இதில் எந்த கடமை மனப்பான்மையும் வரக்கூடாது. அதாவது பலனை எண்ணி ஒரு முறை செய்வது பின்பு விடுவது என்பதல்லாமல் எந்த எதிர் பார்ப்பும் இன்றி நாளாந்தம் செய்து வாருங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்துவரும் காலத்தில் முதலில் உங்கள் சிந்தனை மனம் (rational mind) குரு கூறுவது போல் வந்து தவறாக வழி காட்டக்கூடும். ஆனால் தொடர்ச்சியான முயற்சியாலும் பயிற்சியாலும் ஆழ்மனது குருவுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். அதன் பின்பு உங்கள் முடிவுகள் மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியானதாகவும் வெற்றி பெறக்கூடியவையாகவும் இருக்கும்.

நாளாந்த கடமைகள் தவிர்ந்து மனதில் எந்த ஒரு புதிய எண்ணம் தோன்றினாலும் ஒருதடவை மனதிற்குள் "குரு நாதா இந்த எண்ணம் சரியானதா? செயற்படுத்தலாமா?" எனக்கேட்டு சிறிது நேரத்தின் பின்னர் (வாழ்க்கையின் முக்கிய விடயங்களாக இருந்தால் சில நாள் தொடர்ச்சியான பிரார்த்தனையின் பின்னர் ) அதனை செயற்படுத்துவதற்கான வழி முறைகளில் இறங்கவும்.  இப்படி நீங்கள் செய்யும் போது சரியான பாதையில் செல்வதற்கான வழியினை குரு நாதர் ஏற்படுத்தித் தருவார் .

இப்படி செய்து கொண்டு வரும்போது உங்களது சித்தமாகிய ஆழ்மனம் விழிப்படைய தொடங்கும். இந்த ஒரு சாதனை மட்டுமே போதும் நீங்கள் அனைத்து ஞானத்தினையும் அடைவதற்கான வழி.

நிபந்தனைகள்
  • இந்தப் பயிற்சியில் வரும் குரு நாதர் தொடர்பு கொண்டு தனது சுய பிரச்சனைக்கு (உங்களிற்கும்  குடும்பத்தினரிற்கும்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சுய நலமாக இருக்கின்றதே என்று புலம்புவராக இருந்தால் சற்று காத்திருங்கள், வரும் பாடங்களில் விடை கிடைக்கும்.
  • தீய எண்ணங்களை செயற்படுத்துவதற்கான பிரார்த்தனைகள் செய்தல் கூடாது.
  • மன ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்வது விரைவாக சாதனையில் சித்தி பெற இன்றி அமையாதது. அவை பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும்.
அன்பர்களே இப்போது நீங்கள் பயமில்லாமல் சித்த வித்தை கற்கலாம் என்ற நம்பிக்கை தங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்தப்பயிற்சியினை செய்து உங்களுக்கும் குரு நாதருக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட்டவுடன் அடையும் பலன்களை நீங்கள் அனுபவித்து எமக்கும் கூறுங்கள்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Tagged:

0 comments:

Post a Comment