Sunday, May 5, 2013

இனி வரும் பதிவுகளில் பதியப்படும் சித்த வித்தை பாடங்களைப் படிப்பதற்கு முன் எப்படியான தன்மையில் இருந்து அவற்றை கற்கவேண்டும் என்பதனை விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இன்று இவற்றை கற்பிக்கும் முறைகள் எமது பாரம்பரிய கல்விமுறை அல்ல! எமது பாரம்பரிய கல்வி முறை குருகுலவாசமாகும். குருகுல வாசத்தில் மாணவன் எப்படி வித்தையினை கற்றுக்கொள்கிறான் என்பதனை அறிந்து அதன் செயல் முறையினை உணர்ந்தால் மட்டுமே உண்மையில் நாம் இவற்றை கற்றுக் கொள்ளமுடியும்.

பண்டைக்காலத்தில் ஒரு மாணவன் வித்தை கற்கவேண்டுமானால் குருவின் ஆசிரமத்திற்கு செல்லவேண்டும், அங்கு அவருடனேயே வசித்தவண்ணம் அவரது அன்றாட கடமைகளை செய்துகொண்டு அவர் கூறும் உபதேசங்களை மனதில் கிரகித்துக்கொண்டு தனது அன்றாட வேலைகளை தவறவிடாமல் செய்தவண்ணம் பயிற்சிக்க வேண்டும். குருவின் உபதேசம் மிக சுருக்கமாக சூத்திரமாகவே இருக்கும், அவற்றை கிரகித்து பயிற்சித்து தனது அனுபவமாக்கி கொள்வதே மாணவனின் கடமை. இது மனிதனில் சித்தமாகிய ஆழ்மனதை செயல்படுத்தி கற்கும் முறையாகும். இந்த முறையின் அடிப்படைகள்:
  1. குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.
  2. அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவிடக் கூடாது.
  3. கூறியவற்றை கிரகித்து அதன் படி பயிற்சித்து அதன் உண்மைத்தன்மையினை தன்னுள் உணர்ந்து தன்னுடையதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
  4. இதுதவிர இவற்றை சரியா, பிழையா என விவாதித்து விளங்கப்படுவதில்லை. இதன் அர்த்தம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு குருவிற்கு அடிமையாக இருத்தல் என்பதல்ல. எந்த ஆய்வும் உங்களுடைய அகத்தில் இருத்தல் வேண்டும், அவற்றை சீர்தூக்கி சரியானதா எனப்பயன் பெறும் உரிமை உங்களுடையதாக இருத்தல் வேண்டும். அந்த உண்மை தங்களுக்கு தங்களே நிருபிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  5. தங்களால் குறித்த விடயங்கள் உணரமுடியாத தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை மகிழ்வுடன் ஏற்கும் கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே இந்த சித்தவித்யா பாடங்களும் நடை பெறப்போகிறது. அப்படியா! எப்படி? யார் குரு? எங்கு ஆசிரமம்? எவ்வளவு நாள் போயிருக்கவேண்டும்? இப்போது இது சாத்தியமா? என உங்கள் மனதில் எண்ணங்கள் உதிக்கலாம். இதற்கு எமது பதில் முடியும் என்பதே!

எப்படி?

நன்றாக கவனியுங்கள், ஒருவிடயத்தினை கற்பதற்கு அடிப்படையான சூஷ்மமே முக்கியமே, இதுவே சித்த வித்யா! அல்லாது ஸ்தூல வடிவம் அல்ல! குருகுலவாசத்தில் மனம் பெறும் நிலையினை தற்போது செயற்படுத்தினால் அதே நிலையில் நாமும் கற்கலாம் என்பதே இதன் அடிப்படை!. எப்படி என்பதனை காண்போம்.

ஒருவன் தனது சாதனையினை தொடங்குவதற்கு முதலில் அதுபற்றிய உண்மைகள் சுருக்கமாக வார்த்தை மூலமாக குரு விளக்க வேண்டுமே!

அதனை இந்த பதிவுகள் செய்யும். பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதும், அவற்றை கிரகிப்பதும் உங்களுடைய கடமை,

எனினும் இந்தப்பதிவுகளை எழுதும் சுமனன் ஆகிய நான் யாருக்கும் குரு அல்லன். எமது ஆதிகுருவாகிய ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, அவரின் மாணவர் ஸ்ரீ கண்ணைய யோகி, அவரின் மாணவர் ஸ்ரீ காயத்ரி சித்தர் அவரிடம் நான் கற்றவற்றை அவர்களின் ஆணையில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு "செயலாளராக" வெளியிடுவதே எனது பணி. உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களிடம் கற்றுக் கொள்ளவே இந்த முயற்சி. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் வெறும் தபால்காரன் மட்டுமே, மற்றும்படி வழிமுறைகளை பின்பற்றி பலனடைந்து கொள்வது உங்களுக்கும் சூஷ்மத்தில் உள்ள மேற்குறித்த குரு நாதர்களுக்கும் இடையிலானது.

உங்களது நாளாந்த கடமைகள் எதுவும் இருந்தால் அவற்றை தவறவிடக்கூடாது என்பதுதான் முக்கியமே அல்லது குருவின் ஆசிரமத்தில் சேவை செய்தால்தான் ஞானம் வரும் என்ற மன நிலையில் எதுவித உண்மையும் இல்லை, வாய்ப்பு இருந்து நீங்கள் செய்தால் அவருடைய அன்பு நிறையக் கிடைக்கும், இல்லாவிட்டால் எது உங்களது நாளாந்த கடமையோ அதனை தவறாது ஒழுங்காக செய்யுங்கள்.

பதியப்படும் விடயங்களை பலமுறை படியுங்கள், அவற்றை உங்களது சொந்த பயிற்சியில் அனுபவத்தின் மூலமாக பெறுவதைக் கொண்டு உங்களுடையதாக்குங்கள்.

ஆக நாம் வாழும் இந்த பூமி, சூழல், குடும்பம்தான் எமது குருவின் ஆசிரமம், பிரபஞ்சம் முழுவதும் கலந்துள்ள அகஸ்தியமகரிஷி (அல்லது உங்களுடைய குரு) தான் எமது குரு, எமது தற்போதைய அன்றாட வாழ்க்கை கடமைகள்தான் குரு சேவை, இந்தப் பாடங்கள்தான் குரு உபதேசம். ஆகவே இந்தப் பாடங்களை தவறாமல் கற்று, குரு சேவையாக உங்களது நாளாந்த கடமைகளை செய்தவண்ணம், பயிற்சிகளை செய்துவருவீர்களேயானால் அவற்றினால் பலன் அடைவீர்கள் என்பதனை உறுதி கூறுகிறோம்.

நாம் விளக்கிய முறையில் இவற்றைக்கற்பதற்கு உங்களது சிரத்தை அல்லது ஆர்வம் இன்மை தவிர்ந்த எதுவும் தடையாக இருக்காது என நம்புகிறேன்.

இன்றிலிருந்து இப்படி உங்களது குருகுலவாசத்தினை ஆரம்பியுங்கள்!

அடுத்த பாடத்தில் குருநாதருடன் தொடர்பினை ஏற்படுத்தும் வழிக்கான ஆரம்ப நிலைகளைப்பற்றிப் பார்ப்போம். 

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Tagged:

0 comments:

Post a Comment