Thursday, June 20, 2013

ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

Gayatri Mantra
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.

சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள்


ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...