தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | சிதம்பரம் |
இறைவன் பெயர் | கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர் |
இறைவி பெயர் | கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 8, திருஞானசம்பந்தர் - 2 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 Km தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN - 608001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். |
- பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
- தரிசிக்க முக்தி தரும் தலம்
- பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
- ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
- அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
- நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
- சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - இரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை.
இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும். இவற்றுள்
- சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
- கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் "இடங்கழி நாயனார்" வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.
- இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
- தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.
- நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.
மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.
சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.
Content Source : www.shivatemples.com
No comments:
Post a Comment