Wednesday, May 22, 2013

சித்தவித்யா பாடங்கள்: 04 மனிதனின் அமைப்பு


சென்ற பாடங்களை படித்தவர்களுக்கு சித்த வித்தையின் அடிப்படை நோக்கம் விளங்கியிருக்கும். பொதுவாக நாம் ஸ்தூலத்திலுள்ளவற்றையே உண்மையென நம்பி வாழ்கிறோம், ஆனால் ஸ்தூலத்தையும் தாண்டி எமது ஸ்தூல புலன்களுக்கப்பால் இருக்கும் சக்திகளால் நாம் கட்டுப்படுத்துவதையும் உணர்கிறோம். அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது என்ற ஆய்வில் மனிதன் கண்ட இருதுறைகள்தான் ஆன்மவிஞ்ஞானம், பௌதீக‌ விஞ்ஞானம்.

பௌதீக விஞ்ஞானம் புறவயச் சூழலை ஆராய்வது, ஆன்ம விஞ்ஞானம் அகச்சூழலை ஆராய்வது. ஆன்ம விஞ்ஞானத்தின முதல் நோக்கம் தன்னையறிதல் மூலம் தலைவனை அறிதல் என்பதாகும். ஆதலால்தான் அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்தில் உண்டு என சித்தர்கள் சொல்லிவைத்தார்கள். ஆகவே சித்த வித்தையினை, அதன் செயற்பாட்டினை தெளிவாக விளங்கி, அதன் வரைமுறைகள், பிரயோகங்கள் என்ன என்பதனை தெரிந்துகொள்ள முதலாவது நாம் மனிதராகிய எம்மைப் பற்றி அறிந்துகொள்வதாகும்.
  • மனிதன் தனது அமைப்பினை அறிந்துகொள்ள சில விதிகளை புரிந்துகொள்ளவேண்டும்.
  • எந்தவொரு பொருளும் அதன் அமைப்பில் சூக்ஷ்மம், ஸ்தூலம் என இரு இருப்பைக் கொண்டிருக்கும்.
  • எந்தப்பொருளும் சூக்ஷ்மத்திலிருந்தே ஸ்தூலதன்மைக்கும் வரும்.சூக்ஷ்மத்தில் இல்லாத எதுவும் ஸ்தூலத்தில தோன்றாது.
  • இவற்றுக்கிடையிலான இணைப்பு பிராண சக்தி எனும் உயிர் சக்தியால் உருவாக்கப்படுகிறது.
இந்த மூன்றுமே இன்றைய பாடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். மற்றும் சில ஆழமான விடயங்கள் காணப்பட்டாலும் அவை பின்வரும் காலங்களில் எடுத்துகொள்ளப்படும்.

மேற்குறித்த விதியின் படி மனிதனது அமைப்பு கீழ்வரும் படத்தில் உள்ளவாறு காணப்படும்.


ஆக சித்த வித்தையின் படி மனிதனின் சூஷ்மம் ஸ்தூலம் இரண்டை பற்றியும் அறிதல் வேண்டும். மேற்கூறிய படத்தில் குறிப்பட்ட விடயங்களை சித்தர்களது நூற்களில் பஞ்ச கோசம், அந்தக்கரணம் எனும் சொற்கள் மூலம் அறியலாம். பொதுவாக சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுபவர்கள் இவற்றை எது தனிப்பட அடுக்குகளாக இருப்பதாக கூறியிருப்பதை காணலாம், சூஷ்ம உடலின் கூறுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. தனிப்பட அடுக்குகளாக (layers) இருப்பதில்லை.

மேலே கூறப்பட்டதன் படி சூஷ்மத்தினை எமக்கு கட்டுப்படுத்தும் சக்தி வந்தால் ஸ்தூலம் தானாக கட்டுப்படும் என்பதே அனைத்து சாதனைகளினதும் குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையின் படி பிராணன் தான் ஸ்தூலத்திற்கும் சூஷ்மத்திற்கும் இடையிலான பாலமாகும்.  பிராணனுடன் கலந்துதான் ஸ்தூல சூஷ்ம உடல்கள் நன்மையோ தீமையோ பெறுகின்றன.

நன்மையையும் தீமையும் எவை என்பதனை அந்தக் கரணங்கலான மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் தீர்மானிக்கின்றன.

உதாரணம் மூலம் விளங்குவதானால் கணணி ஒன்றில்
  • வெளியே தெரியும் கணணி (Computer hardware) - ஸ்தூல உடல்
  • அதிலுள்ள அசம்பிளி லாங்குவேஜ் (Assembly language) - அகங்காரமும் ஆன்மாவும் கலந்த நான் எனும் உணர்வு .
  • புரோகிராமிங் லொஜிக் (Programming logic) - புத்தி
  • விண்டோஸ் புரோகிராம் (Windows program) - சித்தம் ஆகிய ஆழ்மனம்
  • மொனிட்டர் (monitor)  - புறமனம்
இவற்றை விளங்குவதன் மூலம் ஒருவருடைய இந்த ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்த எப்படி சில தகமைகள் வேண்டுமோ அப்படி எமது ஸ்தூலத்தினையும் சூஷ்மத்தினையும் கட்டுப்படுத்தும் பயிற்சிதான் சித்த வித்தை, யோகபயிற்சி இவையெல்லாம்.

இந்த அடிப்படையினைப் பற்றிய மேலதிக விளக்கங்களை தகுந்த இடங்களில்  பார்ப்போம்.

அடுத்த பாடத்தில் எந்த சாதனைக்கும் முக்கியமான மனதினை சுத்தி செய்யும் சாதனை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Monday, May 6, 2013

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்

யோகா பைரவர், திருப்பத்தூர்
வ. எண் நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

Sunday, May 5, 2013

சித்தவித்யா பாடங்கள்: 03 குருவை சூஷ்மத்தில் தொடர்புகொள்வதற்கான பயிற்சி


சென்ற பாடத்தில் கூறப்பட்டதின் படி சூஷ்மத்திலுள்ள உங்களுக்கு விருப்பமான ஒரு குருவினை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவ்வாறாயின் அவரது பெயரிற்கு முன்னால் "ஓம்" சேர்த்து இறுதியில் 'நமஹ/போற்றி" சேர்த்து அதனை ஒரு எளிய மந்திரச் சொல்லாக்கிக் கொள்ளவும். உதாரணமாக "ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ" என்றவாறு உருவாக்கிக்கொண்டு அவரது படத்தினையோ, தீப ஒளியினையோ ஒரு இடத்தில் நிரந்தரமாக கண்பார்வை மட்டத்தில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். குறித்த இடம்  வீட்டின் பூஜை அறையில் அல்லது சுத்தமான ஒரு சிறு இடத்தில் இடம் ஒதுக்கிக் கொள்ளவும், அந்த இடம் வேறு எந்தப் உபயோகத்திற்கும் இல்லாததாக இருத்தல் வேண்டும். அந்த இடம் நீங்களும் குருநாதரும் தொடர்பு கொள்வதற்கான இடமாக மட்டும் இருக்கவேண்டும்.

பின்பு குறித்த நேரத்தில் அமைதியாக அமர்ந்து கண்ணை மூடி சில வினாடிகள் மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு (வேறு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்) குருநாதரின் உருவத்தையோ அல்லது தீப ஒளியினையோ பார்த்தவண்ணம் நாமத்தினை ஐந்து நிமிடமோ அல்லது 108 தடவையோ மனதில் உச்சரித்த வண்ணம் (முடியாவிட்டால் ஆரம்பத்தில் சத்தமாக உச்சரித்து பின் மானசீகமாக செய்யவும்) அவருடன் அன்பு கலந்த பார்வையாக செலுத்தவும். மனதில் எமக்கு விருப்பமான ஒருவரை வரவேற்க எப்படி காத்திருப்போமோ அந்த உணர்ச்சி பாவத்தில் இருக்கவும். இப்படி நாமத்தினை உச்சரித்து முடித்தவுடன் மனதில் அன்புடன் கீழ்வரும் பொதுவான பிரார்த்தனையினை மனதால் வேண்டவும் "குரு நாதா எனது செயல்களுக்கு காரணமான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன், அவற்றை நல்ல அதிர்வுடையவை ஆக்கி உங்களுடன் எப்போதும் இணைந்தவையாய் எப்போதும் நானும் நீங்களும் ஒன்றே என நிலையில் எனது மனமும் செயலும் நல்லதாகிடவும், என்னிலும், என்னைச் சூழவாழ்பவர்கள் வாழ்விலும், குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும், பூமியிலும் அன்பு, ஆனந்தம்,ஞானம், செல்வம் நிறைந்து ஒத்திசைவாய் வாழ அருள் புரியவேண்டும்" என மூன்று முறை பிரார்த்திக்கவும்.

இதன் பின்பு உங்களது உடனடித்தேவையான தனிப்பட்ட பிரார்த்தனை ஒன்றை மட்டும் செய்யவும், குறித்த ஒன்று நிறைவேறும் வரை அந்த ஒரு பிரார்த்தனையினை மட்டுமே செய்யவும், உதாரணமாக " எனது தகுதிக்கும் ஆற்றலிற்கும் தக்க வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் குருதேவா" என்று பிரார்த்திக்கவும். இதற்கு பின்னர் கண்ணைத்திறந்து சில நிமிடங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவதானித்து வாருங்கள். முதலில் தோன்றும் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வரவும். 

தனிப்பட்ட வேண்டுதலிற்கு ஒரு காரியம் நிறைவேறிய பின் மற்றைய காரியத்தினை பிரார்த்திக்கவும்.  நிதானமாக சிந்தித்து உங்கள் தேவைகளை வரிசைப்படுத்தி முக்கியமானதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொது நிச்சயமாக வெற்றி பெறுவதுடன் உங்களுக்கு நம்பிக்கையும் பிறக்கும்.

தொடங்குவது ஒரு வியாழக்கிழமையாக இருத்தல் நல்லது.

இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்து வரவும். இந்த பயிற்சி வாழ்நாள் பயிற்சியாக இருக்கட்டும். இதில் எந்த கடமை மனப்பான்மையும் வரக்கூடாது. அதாவது பலனை எண்ணி ஒரு முறை செய்வது பின்பு விடுவது என்பதல்லாமல் எந்த எதிர் பார்ப்பும் இன்றி நாளாந்தம் செய்து வாருங்கள். இப்படி தொடர்ச்சியாக செய்துவரும் காலத்தில் முதலில் உங்கள் சிந்தனை மனம் (rational mind) குரு கூறுவது போல் வந்து தவறாக வழி காட்டக்கூடும். ஆனால் தொடர்ச்சியான முயற்சியாலும் பயிற்சியாலும் ஆழ்மனது குருவுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். அதன் பின்பு உங்கள் முடிவுகள் மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியானதாகவும் வெற்றி பெறக்கூடியவையாகவும் இருக்கும்.

நாளாந்த கடமைகள் தவிர்ந்து மனதில் எந்த ஒரு புதிய எண்ணம் தோன்றினாலும் ஒருதடவை மனதிற்குள் "குரு நாதா இந்த எண்ணம் சரியானதா? செயற்படுத்தலாமா?" எனக்கேட்டு சிறிது நேரத்தின் பின்னர் (வாழ்க்கையின் முக்கிய விடயங்களாக இருந்தால் சில நாள் தொடர்ச்சியான பிரார்த்தனையின் பின்னர் ) அதனை செயற்படுத்துவதற்கான வழி முறைகளில் இறங்கவும்.  இப்படி நீங்கள் செய்யும் போது சரியான பாதையில் செல்வதற்கான வழியினை குரு நாதர் ஏற்படுத்தித் தருவார் .

இப்படி செய்து கொண்டு வரும்போது உங்களது சித்தமாகிய ஆழ்மனம் விழிப்படைய தொடங்கும். இந்த ஒரு சாதனை மட்டுமே போதும் நீங்கள் அனைத்து ஞானத்தினையும் அடைவதற்கான வழி.

நிபந்தனைகள்
  • இந்தப் பயிற்சியில் வரும் குரு நாதர் தொடர்பு கொண்டு தனது சுய பிரச்சனைக்கு (உங்களிற்கும்  குடும்பத்தினரிற்கும்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது சுய நலமாக இருக்கின்றதே என்று புலம்புவராக இருந்தால் சற்று காத்திருங்கள், வரும் பாடங்களில் விடை கிடைக்கும்.
  • தீய எண்ணங்களை செயற்படுத்துவதற்கான பிரார்த்தனைகள் செய்தல் கூடாது.
  • மன ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்வது விரைவாக சாதனையில் சித்தி பெற இன்றி அமையாதது. அவை பற்றி அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் பார்க்கவும்.
அன்பர்களே இப்போது நீங்கள் பயமில்லாமல் சித்த வித்தை கற்கலாம் என்ற நம்பிக்கை தங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்தப்பயிற்சியினை செய்து உங்களுக்கும் குரு நாதருக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட்டவுடன் அடையும் பலன்களை நீங்கள் அனுபவித்து எமக்கும் கூறுங்கள்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

சித்த வித்யா பாடம்: 02 - சித்த வித்தையின் படி குரு தத்துவம்

சென்ற பதிவில் குருகுலவாசம் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் கூறிய முறைப்படியான குருகுல வாசத்திற்கான படிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.

1 . மனதில் இவற்றை  கற்க வேண்டும் என்ற விருப்பம்.

எவன் ஒருவன் அமைதியான மனத்துடன், மௌனமாக, ஒருமைப்பட்ட மனதுடன் அறிவைத்தேடுவதற்கான பயணத்தினை அடைகிறானோ, அவன் சித்த வித்தையினையோ மற்ற எந்த அறிவினையும் அடைவதற்குரிய பாதையினை அறிகிறான், அப்படிப்பட்டவன் எப்போதும் குருவை அடைகிறான். இதுவே சித்த வித்தைக்கான முதல் அடிப்படை. இதனை நன்கு மனதில் பதியவைத்துக்கு கொண்டு இனி விளக்கங்களைப் பார்ப்போம்.

ஒரு நல்ல வளமான நிலத்தில் தரமான விதையினை விதைத்து அதற்கு தகுந்த உரமிட்டு, நீர்பாய்ச்சி பராமரித்தால் சிறந்த விளைச்சலையும் கனிகளையும் பெறுவது போல் இந்தப்பாடங்களை கற்பதால் உங்களது சித்தமாகிய ஆழ்மனதில் இவற்றின் அடிப்படை விதைக்கப்படும். விதைகள் தகுந்த சித்த மானச பக்குவம் வரும் பொழுது பலனினைத்தரும். ஆதலால் ஆர்வமுடன் இவற்றைப் படித்து மட்டுமே வருவீர்களானாலேயே ஆனால் கூட‌ அவை உங்களுக்கு தகுந்த பக்குவம் வரும் சூழ்நிலைகளில் உதவும். அத்த‌கைய‌ நிலையின் பின்பு இதில் கூற‌ப்ப‌ட்ட விட‌ய‌ங்க‌ள் உங்க‌ள‌து சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளாகும்.

2. குருவின் சூஷ்ம தொடர்பு பெறுதலுக்கான விதி 

இன்று குரு தத்துவம் தனிமனித போற்றுதல்களாகவே உள்ளது. சித்த வித்தைப்படி குருதத்துவம் என்பது என்ன என்பதனை இங்கு பார்த்துவிட்டு மேலே செல்லவும்.

ஆக குருதத்துவம் என்பது எல்லையற்ற பிரபஞ்ச அறிவு அவற்றை பெரும் தன்மையினை எம்மில் உருவாக்கிக் கொள்ளும் முறைதான் குரு சிஷ்ய பாவம்.

அடுத்து குருவிட‌மிருந்து வித்தையினைப் பெறுவ‌தும் ச‌ரியாக‌ விள‌ங்கிக் கொள்வ‌தும் எப்ப‌டி? ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌? இத‌ற்கு த‌த்துவ‌ ரீதியாக‌ ப‌ல‌வித‌ (பூர்வ‌ புண்ணிய‌ ப‌ல‌ன், குரு அருள் என‌) ப‌ல‌வித‌ விள‌க்க‌ங்க‌ள் இருப்பினும் நாம் இங்கு கூற‌வ‌ருவ‌து இத‌ற்கான‌ விஞ்ஞான அடிப்படையிலான‌ கார‌ண‌த்தினை, இத‌ன் மேல‌திக‌ விள‌க்க‌ங்க‌ள் எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் என்ற‌ ப‌குதியில் விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌டும். இங்கு இத‌ன் அடிப்ப‌டையினை விள‌க்கி விடுகிறேன்.

இங்கு பௌதிக‌விய‌ல் கோட்பாட்டினை அடிப்ப‌டையாக‌ கொண்டால் எந்த‌ ஒரு எண்ண‌மும் அலைவ‌டிவ‌த்தினை (மூளையில் எண்ண‌ அலைக‌ள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா ஆகிய‌ அலைவ‌டிவாக‌ உருவாகுவ‌தாக‌ ஈ.ஈ.ஜி க‌ற்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌)))0)) கொண்டிருக்கின்ற‌ன‌... பௌதிக‌விய‌ல்/இய‌ற்பிய‌ல் க‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அலைக‌ள் ப‌ரிவுறும் என்ப‌து. ப‌ரிவு (resonance) என்பது ஒவ்வொரு அலையும் குறித்த அதிர்வினை (frequency) அடையும் போது மிக உயர்ந்த அலைவேகத்தினை அடையும். இந்த ஒத்த அதிர்வு நிலையினை அடையும் போது குறித்த தொகுதிகள் தமக்கிடையே சக்திப்பரிமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த சக்திப்பரிமாற்றம் நிகழும் சந்தர்ப்பங்கள் பலவாறக இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே மானச, சித்த வித்தைகள் அனைத்தும் இயங்குகின்றன. இது எப்படி எனப்பார்ப்போம்.

சித்த வித்தையின் படி (மற்றைய முறைகளும்தான் பூஜை, உபாசனை, யோக சாதனை, தாந்திரீகம்) நாம் எமது சக்தியினை அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அதாவது உயர் சக்திகளுடன் எமது  எண்ண அலைகளை பரிவுறவைத்து தொடர்புகொள்ளுவதனால் எமது சக்தியினை  அதிகரித்துக்கொள்ளலாம். அதன் படி எமது தற்போதைய "இயற்கையான எண்ண அதிர்வினை” ஒரு ஒத்திசைவானநிலைக்கு (Harmonic state) கொண்டுவந்து, பின்னர் உயர்ந்த அதிர்வொன்றுடன் (higher frequency) சமப்படுத்தும் போது எமக்கு உயர்ந்த அதிர்வின் சக்திப்பரிமாற்றம் (energy transfer) கிடைக்கிறது, இவற்றை ஆரம்பத்தில் சிறுகச் சிறுக செய்து நீண்டகாலச் சாதனையில் எம்முடன் நிலைக்கச் செய்தலே சித்த வித்தையின் இலக்கு. இப்படிச் செய்து சித்தி பெற்றதால்தான் சித்தர்கள் என பெயர் வந்தது

3 . குருவின் சூஷ்ம தொடர்பே உண்மையான குரு சிஷ்ய தொடர்பு


எம்மிடம் மனம் இருக்கிறது, தற்போது அதனை உயர் சக்தியுடன் பரிவுறச் செய்யவேண்டும். உயர் சக்தி எது எம்மைப்பொறுத்தவரையில் "குரு", எம் அனைவருக்கும் ஆதி குரு அகஸ்திய மகரிஷி, ஆகவே அவருடைய அதிர்வுடன் எமது அதிர்வை பரிவுறச்செய்வதால் எம்முள்ளே அவரது சக்தியினை பெற்றுக் கொள்ளலாம். அவர் பெற்ற சக்திகள் அனைத்தும் மன, சித்த அலைகளாக பிரபஞ்சத்தில் உள்ளன, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அவருடன் ஒத்திசைவதே!

இந்த இடத்தில் அகஸ்திய மகரிஷி என ஒருவரை மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும் எனச் சொல்லவில்லை, உங்களுக்கு விரும்பிய எந்தச் சித்தரையோ, தெய்வங்களையோ, தேவதைகளைக் கூட அழைக்கலாம். எப்படியாயினும் அகத்தின் இயல்பை அறிந்த உயர் பிராண சக்தியுடைய ஞான சித்தர் ஒருவரை வழிகாட்டியாக பெற்றால் உங்களது சக்தியினை உயர்த்திக்கொள்ளலாம், ஞானத்தினையும் பெற்றிடலாம் என்பதுதான் கருத்து.

எப்படி ஒத்திசைவது? அதற்கு இறைவன் அளித்த கொடையே சித்தம் எனும் ஆழ்மனம்.

அதை இயக்குவது எப்படி? தொடர்ச்சியான எண்ணம்! ஜெபம்

ஆம் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சக்தினை தொடர்ச்சியான எண்ண அலை மூலம் சித்தத்தில் பதிப்பிக்கும் முயற்சிதான் ஒரே வழி!

ஆகவே சித்த வித்தை கற்பதற்கு  ஆரம்பத்திலிருந்தே குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதும், மனம், சித்தம் ஆகியவற்றை ஒத்திசைவாக வைத்துக் கொள்வதும் சித்த வித்தையினை கற்பதற்கான முக்கியமான அடிப்படை தேவையாகும்.

4 . சித்த வித்தையின் தன்மையினை  புரிந்துகொள்ளுதல் 

சித்த வித்தை என்பது நாம் தற்காலத்தைய அறிவுத்தேடலில் ஆசிரியர் ஒருவரிடமோ, விரிவிரையாளர் ஒருவரிடமோ வகுப்பு போய் படிக்கும் விடயமல்ல. எல்லா அறிவும் பிரபஞ்சமாகிய ஆகாய மனதில் (Cosmic mind) உறைந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள சூஷ்ம தன்மையுடைய சித்தம்  எனும் ஆழ்மனம் மனிதனிற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி நாமாக அவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சிதான் சித்த வித்தை. ஆகவே ஒரு விடயத்தினை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு யாரும் எதுவும் கற்பித்து விடமுடியாது, குருவானவர் அவற்றை அறிவதற்கு உரிய முறைகளை மட்டுமே தருவார். அவற்றை பயிற்சித்து அனுபவமாக்கி கொள்ளவேண்டியது உங்கள் கடமை.

இந்தப் பயிற்சிகளின் போது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவம் அவர்களுக்கே உரியதாகும். அவற்றில் உயர்வு தாழ்வு, சரி பிழை என்பது இல்லை. அவரவர் மன, பிராண சித்த பரிணாமங்களுக்கு ஏற்ப அவை வேறுபடும். ஆதலால் பலபேரின் அனுபவங்களைக் கேட்டு மனக் குழப்பமுற வேண்டாம்.

இதிலிருந்து உங்களுக்கு இன்னும் ஒரு விடயம் விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்.  அகம் சார்ந்த வித்தைகள் எவற்றிலும் எது சரி அது பிழை என்ற மேற்கத்தைய தர்க்க விவாதங்கள் இல்லை. எமது மூல நூற்களை எடுத்துப் பார்த்தீர்களானால் சூத்திர வடிவிலேயே இருக்கும். அவற்றின் பொருளை குரு எப்படி என்று விளக்கி சொல்லியிருக்க மாட்டார். அவற்றை மனதில் இருத்திக்கொண்டு உங்கள் பயிற்சியினை செய்து வருவிர்களானால் உங்கள் பயிற்சிக்கு தக்க விதத்தில் அவற்றின் பொருளும் பிரயோகமும் விளங்கும்.  உங்களுக்கு இன்னும் தெளிவாக விளங்குவதற்கு ஒரு உதாரணம் பதஞ்சலி யோகத்தின் சூத்திரத்தில் இருந்து காட்டுவோம்.

சூத்திரம் 1 .2 : "யோக சித்த வ்ருத்தி ந்ரோத"

இதன் பொருள் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்துவது எனவே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் சித்த வித்தை (பின்னர் வரும் படங்களில் விளக்கப்படும் ) படி மனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்பதனை சாதனை மூலம் அறிந்து கொள்ளும் மாணவன் படிப்படியாக மேல் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்தி, பின் சித்த மனத்தை கட்டுப்படுத்தி, பின் ஆழ் மனத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக பிரபஞ்ச மனத்தை கட்டுப்படுத்துவதே முழுமையான யோகம். இந்த நிலையில் மேல் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்பவரிற்கும், சித்தத்தை கட்டுப்படுத்துபவரிற்கும் இடையிலான அனுபவம், ஆற்றல் வேறுபாடும். 

இவை பற்றி வரும் காலங்களில் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். தற்போதைக்கு நீங்கள் மனக்குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே விளக்கினோம். ஏனெனில் இன்றைய காலத்தில் சித்தர் பாடல்கள், சித்தர்களது கலைகள் எல்லாம் தற்காலத்திய தர்க்க கல்விமுறையிலேயே ஆராயப்படுகிறது,இதனால் தகவல்கள் பெறலாமே அன்றி அனுபவம் பெறமுடியாது என்பதனை விளங்கிக்கொள்ளவும். 

ஆகவே மனதில் இவற்றை கிரகித்துக்கொண்டு குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தயாராவோம்.

5. குருவைத் தேர்ந்தெடுத்தல்

சித்த வித்தை என்பது மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது,  ஆகவே குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  மாணவரின் உரிமை, இதில் வீணான பயமுறுத்தல்கள் எவையும் இல்லை.  அடுத்து சூஷ்ம நிலையடைந்த சித்தர்கள் எவரிடமும் பேதமில்லை.  ஒவ்வொரு சித்தரும் இறுதி நிலையடையும் போது பிரபஞ்ச மகா சக்தியில்  கலக்கின்றனர். நாம் எமது மனதை ஒருமைப்படுத்தி அவற்றை பெறுவதற்கும் அவர்களின் பௌதிக இருப்பை நிலைப்படுத்துவதற்கும்  வைத்துக்கொண்டவை தான் பல தெய்வங்கள், பல சித்தர்களின் பெயர்கள் எல்லாம். ஆதாலால் இவற்றை கற்க விரும்புபவர்கள் உங்கள் மன நம்பிக்கைக்கு தகுந்தபடி குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  முக்கியமான நிபந்தனை அவர் சூஷ்மத்தில் இருக்க வேண்டும் அதாவது அவர் தற்போது உடலில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

ஆகவே கீழ்வருவனவற்றை தெளிவாக முடிவு செய்யுங்கள்;

1. நீங்கள் எந்த சித்தரை, ரிஷியை குருவாக கொள்ளப்போகிறீர்கள்?

2. பின்பு அவரை எந்த வடிவில் மனதில் உருவகப்படுத்த போகிறீர்கள்? (உருவத்திலா, ஜோதியிலா, மானசீகமாகவா)

3. தினமும் எந்த நேரத்தில் உங்கள் சாதனையினை செய்யப்போகிறீர்கள் என்பதனை முடிவு செய்யுங்கள்.

இவற்றை முடிவு செய்து கொண்டு அடுத்த பாடத்தினை எதிர்பாருங்கள், அதில் எப்படி குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது என்ற செயல்முறை பதியப்படும்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

சித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்

இனி வரும் பதிவுகளில் பதியப்படும் சித்த வித்தை பாடங்களைப் படிப்பதற்கு முன் எப்படியான தன்மையில் இருந்து அவற்றை கற்கவேண்டும் என்பதனை விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இன்று இவற்றை கற்பிக்கும் முறைகள் எமது பாரம்பரிய கல்விமுறை அல்ல! எமது பாரம்பரிய கல்வி முறை குருகுலவாசமாகும். குருகுல வாசத்தில் மாணவன் எப்படி வித்தையினை கற்றுக்கொள்கிறான் என்பதனை அறிந்து அதன் செயல் முறையினை உணர்ந்தால் மட்டுமே உண்மையில் நாம் இவற்றை கற்றுக் கொள்ளமுடியும்.

பண்டைக்காலத்தில் ஒரு மாணவன் வித்தை கற்கவேண்டுமானால் குருவின் ஆசிரமத்திற்கு செல்லவேண்டும், அங்கு அவருடனேயே வசித்தவண்ணம் அவரது அன்றாட கடமைகளை செய்துகொண்டு அவர் கூறும் உபதேசங்களை மனதில் கிரகித்துக்கொண்டு தனது அன்றாட வேலைகளை தவறவிடாமல் செய்தவண்ணம் பயிற்சிக்க வேண்டும். குருவின் உபதேசம் மிக சுருக்கமாக சூத்திரமாகவே இருக்கும், அவற்றை கிரகித்து பயிற்சித்து தனது அனுபவமாக்கி கொள்வதே மாணவனின் கடமை. இது மனிதனில் சித்தமாகிய ஆழ்மனதை செயல்படுத்தி கற்கும் முறையாகும். இந்த முறையின் அடிப்படைகள்:
  1. குரு தனது அனுபவத்தினை சுருக்கமாக மாணவனிற்கு விளக்குவார்.
  2. அவன் தனது நாளாந்த கடமைகளினை தவறவிடக் கூடாது.
  3. கூறியவற்றை கிரகித்து அதன் படி பயிற்சித்து அதன் உண்மைத்தன்மையினை தன்னுள் உணர்ந்து தன்னுடையதாக்கி கொள்ளுதல் வேண்டும்.
  4. இதுதவிர இவற்றை சரியா, பிழையா என விவாதித்து விளங்கப்படுவதில்லை. இதன் அர்த்தம் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு குருவிற்கு அடிமையாக இருத்தல் என்பதல்ல. எந்த ஆய்வும் உங்களுடைய அகத்தில் இருத்தல் வேண்டும், அவற்றை சீர்தூக்கி சரியானதா எனப்பயன் பெறும் உரிமை உங்களுடையதாக இருத்தல் வேண்டும். அந்த உண்மை தங்களுக்கு தங்களே நிருபிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  5. தங்களால் குறித்த விடயங்கள் உணரமுடியாத தன்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவற்றை மகிழ்வுடன் ஏற்கும் கொண்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே இந்த சித்தவித்யா பாடங்களும் நடை பெறப்போகிறது. அப்படியா! எப்படி? யார் குரு? எங்கு ஆசிரமம்? எவ்வளவு நாள் போயிருக்கவேண்டும்? இப்போது இது சாத்தியமா? என உங்கள் மனதில் எண்ணங்கள் உதிக்கலாம். இதற்கு எமது பதில் முடியும் என்பதே!

எப்படி?

நன்றாக கவனியுங்கள், ஒருவிடயத்தினை கற்பதற்கு அடிப்படையான சூஷ்மமே முக்கியமே, இதுவே சித்த வித்யா! அல்லாது ஸ்தூல வடிவம் அல்ல! குருகுலவாசத்தில் மனம் பெறும் நிலையினை தற்போது செயற்படுத்தினால் அதே நிலையில் நாமும் கற்கலாம் என்பதே இதன் அடிப்படை!. எப்படி என்பதனை காண்போம்.

ஒருவன் தனது சாதனையினை தொடங்குவதற்கு முதலில் அதுபற்றிய உண்மைகள் சுருக்கமாக வார்த்தை மூலமாக குரு விளக்க வேண்டுமே!

அதனை இந்த பதிவுகள் செய்யும். பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதும், அவற்றை கிரகிப்பதும் உங்களுடைய கடமை,

எனினும் இந்தப்பதிவுகளை எழுதும் சுமனன் ஆகிய நான் யாருக்கும் குரு அல்லன். எமது ஆதிகுருவாகிய ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, அவரின் மாணவர் ஸ்ரீ கண்ணைய யோகி, அவரின் மாணவர் ஸ்ரீ காயத்ரி சித்தர் அவரிடம் நான் கற்றவற்றை அவர்களின் ஆணையில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு "செயலாளராக" வெளியிடுவதே எனது பணி. உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களிடம் கற்றுக் கொள்ளவே இந்த முயற்சி. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் வெறும் தபால்காரன் மட்டுமே, மற்றும்படி வழிமுறைகளை பின்பற்றி பலனடைந்து கொள்வது உங்களுக்கும் சூஷ்மத்தில் உள்ள மேற்குறித்த குரு நாதர்களுக்கும் இடையிலானது.

உங்களது நாளாந்த கடமைகள் எதுவும் இருந்தால் அவற்றை தவறவிடக்கூடாது என்பதுதான் முக்கியமே அல்லது குருவின் ஆசிரமத்தில் சேவை செய்தால்தான் ஞானம் வரும் என்ற மன நிலையில் எதுவித உண்மையும் இல்லை, வாய்ப்பு இருந்து நீங்கள் செய்தால் அவருடைய அன்பு நிறையக் கிடைக்கும், இல்லாவிட்டால் எது உங்களது நாளாந்த கடமையோ அதனை தவறாது ஒழுங்காக செய்யுங்கள்.

பதியப்படும் விடயங்களை பலமுறை படியுங்கள், அவற்றை உங்களது சொந்த பயிற்சியில் அனுபவத்தின் மூலமாக பெறுவதைக் கொண்டு உங்களுடையதாக்குங்கள்.

ஆக நாம் வாழும் இந்த பூமி, சூழல், குடும்பம்தான் எமது குருவின் ஆசிரமம், பிரபஞ்சம் முழுவதும் கலந்துள்ள அகஸ்தியமகரிஷி (அல்லது உங்களுடைய குரு) தான் எமது குரு, எமது தற்போதைய அன்றாட வாழ்க்கை கடமைகள்தான் குரு சேவை, இந்தப் பாடங்கள்தான் குரு உபதேசம். ஆகவே இந்தப் பாடங்களை தவறாமல் கற்று, குரு சேவையாக உங்களது நாளாந்த கடமைகளை செய்தவண்ணம், பயிற்சிகளை செய்துவருவீர்களேயானால் அவற்றினால் பலன் அடைவீர்கள் என்பதனை உறுதி கூறுகிறோம்.

நாம் விளக்கிய முறையில் இவற்றைக்கற்பதற்கு உங்களது சிரத்தை அல்லது ஆர்வம் இன்மை தவிர்ந்த எதுவும் தடையாக இருக்காது என நம்புகிறேன்.

இன்றிலிருந்து இப்படி உங்களது குருகுலவாசத்தினை ஆரம்பியுங்கள்!

அடுத்த பாடத்தில் குருநாதருடன் தொடர்பினை ஏற்படுத்தும் வழிக்கான ஆரம்ப நிலைகளைப்பற்றிப் பார்ப்போம். 

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

சித்த வித்யா பாடங்கள் - முன்னுரை

 Source : http://yogicpsychology-research.blogspot.in/2011/12/blog-post_29.html

சித்த வித்தை கற்க எண்ணும் பலரிற்கு உள்ள தடைகளை கீழ் வருமாறு வகைப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.

சித்தர்களது நூற்கள் அனைத்துமே பாடல் வடிவில் இருத்தல், அவற்றை புரிந்து கொள்ளும் தன்மையினை சமுகம் இழந்துவிட்டமை. இதற்கு காரணம் எமது பாரம்பரிய கல்வி முறை மாற்றமடைந்தமை, தற்கால கல்வி அறிவுடன் அவற்றை அணுகும் போது அபத்தமான விளைவுகள் பல உண்டாகின்றது. இது கிட்டத்தட்ட நுண்கணித பாடப்புத்தகத்தினை (Calculus text book) சாதரணமான ஒருவன் பார்த்த நிலைதான்.

சித்த வித்தைகள் பற்றிய மாயை,கட்டுக்கதைகள், அற்புதமாக்கல், வியாபாரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள், நோக்கத் தெளிவு இன்மை என்பன. எமது பழைய சமூகம் அகவயப்பட்ட சமூகம், எமது பண்பாடுகள்,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் தன்னையறியும் முறையுடனேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை மாறுபட்டு சமூகம் புறவயப்பட்ட சமூகமாக மாறா ஆரம்பித்தது, இப்படி மாற்ற முற்ற சமூகத்தினூடாக பரிமாறப்பட்ட சித்த வித்தைகளும் பல வித கிளைகளாக யோகமுறைகளாக, காப்புரிமை கோரல்களுடன் மேற்கத்தைய முறையில் "புதுப் புது ப்ராடக்ட்" ஆக வடிவம் பெற்று இன்று வேற்று கலாச்சாரத்தவர்கள் மொழியினர்  போற்றும் ஒரு அரிய கலையாக வடிவம் பெற்றுள்ளது. எம்மைப் பொருத்தவரையில் எம்மிடமிருந்துதான் இவையெல்லாம் சென்றது எனத்தெரியும், ஆனால் அவற்றை மூல நூற்களில் விளங்கும் ஆற்றலோ முறைப் படுத்தப்பட்ட கல்வியோ எம்மிடம் இல்லை.

இந்த நிலையில் இவை பற்றிய அதீத கற்பனைகள், புனைவுகள், இவற்றை சாமானியர் கற்க முடியாது என்ற பயமுறுத்தல், ஒரு சாரார் தமக்கு மட்டுமே அவற்றின் உண்மை விளங்கப்படுத்தப் பட்டுள்ளதாக கருதல், நாவல்கள், சினிமாக்களின் எடுத்தாள்கை என்பவற்றினூடாக பெற்ற கருத்தாக்கங்கள் மீண்டும் எம்மவர்களாலேயே எமக்கு இடப்பட்ட தடைகளாக உருப்பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டும் தற்காலத்து நடைமுறையில் சித்த வித்தையினை விளங்கிக் கொண்டு உள்ளத்தில்  இலகுவாக பதியும் வண்ணம் அவற்றின் மூலங்களின் சாரம் குறையாதவகையில் கற்பதற்கான ஒரு முயற்சிதான் இந்த சித்த வித்யா பாடங்கள்.

பாடத்தினுள் செல்லமுன் இந்த வகுப்புகளிடையான ஒத்திசைவினை மேம்படுத்த அவற்றின் தன்மை பற்றிய ஓர் அறிமுகம் அவசியமானது என்பதால் இதுவரை நான் பெற்ற பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தெளிவுகளை சுயமாக முன் வைக்கிறேன். இவை தவிர்ந்து மற்றய கேள்விகள் இருப்பின் அவற்றினை பின்னூட்டமிட்டால் அவற்றிற்கான பதில்கள் பின்னூட்டமாகவோ, அடுத்துவரும் பாடங்களிலோ இணைத்துக்கொள்ளப்படும்.

இவற்றை பயில்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும், பலரும் பயமுறுத்துகின்றனரே? குரு நேரடியாக இல்லாமல் எப்படி இவையெல்லாம் சாத்தியம்? என உங்கள் எண்ண அலைகள் ஓடுவது எமக்கு புரிகின்றது அன்பர்களே! அதற்கு பதில் ஏகலைவன் எப்படி வித்தை கற்றான்? என்பதில் அடங்கியுள்ளது. அதேவழியில்தான் நாமும் கற்க்கப்போகிறோம். ஆர்வமும் கற்க வேண்டும் என்ற தாகமும்தான் ஒரே தகுதி! ஏகலைவன் குருவிற்கே தெரியாமல்தான் அவர் மனதிலிருந்த ஞானத்தினை ஆகர்ஷித்தான், ஆனால் நாம் ஆதி குரு அகஸ்தியரை எப்போதும் மனதில் இருத்தியே இதைத் தொடரப்போகிறோம், நீங்கள் மற்றைய சித்தர்களை குருவாகக் கொண்டவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. சூஷ்மத்தில் இறைவன், சித்தர்கள் எவருக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. உங்கள் மனதிற்கு பிடித்த சித்தரையோ, தெய்வத்தினையோ குருவாகக் கொள்ளலாம். அவர்களுடன் சூஷ்ம இணைப்பினை ஏற்ப்படுத்திவிட்டால் பின்பு அவர்கள் சூஷ்ம உடலில் உள்ள குருநாதர், தேவதைகள், ஆகாய மனதுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலமும் மேலதிக அறிவினை உங்களது நாளாந்த பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது எப்படி என்பதனை படிப்படியாக பாடங்களினூடே விளக்கப்படும். இப்படிப் படிப்படியாக பெறும் ஞானத்தின் மூலம் எல்லாக் கேள்விக்குமான விடையினை நீங்களாகவே பெற்றுக் கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை, உபாசனை எதுவும் செய்ய வேண்டுமா? இல்லை, செய்பவராக இருந்தால் அவற்றின் உண்மை விளக்கம், பயன்பாடு என்னவென்பதனை அறிந்து கொள்வீர்கள்.

சித்த வித்தை பற்றி பேசுவதற்கும் அவற்றினைப் பதிவதற்கும் உங்களுடைய தகுதி மற்றும் காரணம் என்ன? அந்த வித்தையிற்குரிய குருபரம்பரையினை தொடர்பு கொண்டு கற்றமையும் குருநாதர் உத்தரவுமே இவற்றிற்கான தகுதியும் காரணமாகும். இவைபற்றிய மேலதிக விளக்கம் அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும்.

இவற்றை பயிற்ச்சி செய்ய விருப்பமில்லை, ஆனால் வாசித்து விளங்க விருப்பமாயுள்ளேன்? நிச்சயமாக, நீங்கள் தொடர்ந்து பலமுறை வாசிக்கும் போது படிப்படியாக மனம் அவற்றை செய்வதற்கான நிலையினை, சூழலை உருவாக்கும். எதுவிதமான தாழ்வு மனப்பன்மையினையோ,பய எண்ணங்களையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியாக கற்க்கும் மனநிலையில் அணுகுங்கள். மற்றவற்றை குருநாதர் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் முயற்சி உண்மையானதாக, உள்ளம் விரும்பி செய்வதாக இருக்க வேண்டும். 

இதுவரையிலான விளக்கங்கள் அடிப்படை தெளிவையும் இவற்றை கற்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினையும் மனத்துணிவினையும் தந்திருக்கும் என நம்புகிறோம்.

அடுத்து இனிவரும் பதிவுகளில் பதியப்படப்போகின்ற பாடங்களின் ஒழுங்கைப் பார்ப்போம். இவை பாடத்தின் விரிவுகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. எனினும் அடிப்படை இவ்வாறே இருக்கும்.

பாடங்களது உள்ளடக்கம்

பாடம்:00 அறிமுகம்
பாடங்களின் தன்மை, நிபந்தனைகள், தகுதி, பக்குவம், குரு பரம்பரை

பாடம்: 01 முத‌ன்மையான‌ மூன்று த‌த்துவ‌ங்க‌ள்

மனிதனின் அமைப்பு, மனிதனின் ஏழு அடிப்படைகள், ஸ்தூல உடல், சூஷ்ம உடல், பிராணன்

பாடம்:02 மான‌ச‌ த‌த்துவ‌ங்க‌ள்

நான்காவ‌தும் ஐந்தாவ‌துமான‌ அடிப்படைகள், இயற்கையுணர்வு மனமும், புத்தியும்

பாடம்: 03 ஆன்ம தத்துவங்கள்
ஆறாவதும் ஏழாவது அடிப்படைகள், ஆன்ம மனம், ஆன்ம ஒளி அல்லது ஆன்ம உணர்வு

பாடம்: 04 மனித கதிர்ப்பு
ம‌னித கதிர்ப்பு, ஆரோக்கிய கதிர்ப்பு, பிராண கதிர்ப்பு, மான‌ச‌ த‌த்துவ‌த்தின் மூன்று கதிர்ப்பு (ஆன்மா, கதிர்ப்பு, கதிர்ப்பின் நிற‌ம், க‌திர்ப்பு உருவாகும் வித‌ம்)

பாட‌ம்: 05 எண்ண‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌ல்
எண்ண‌ இய‌க்க‌விய‌ல்,எண்ண‌த்தின் இய‌ல்பு, த‌ன்மை, ச‌க்தி, எண்ண‌த்தின் வ‌டிவ‌ம், எண்ண‌த்தின் மூல‌ம் செல்வாக்கு செலுத்துத‌ல், எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் ப‌ற்றிய‌ இர‌க‌சிய‌ வித்தை கோட்பாடுக‌ள்

பாட‌ம்: 06 தொலைவினுண‌ர்த‌ல், தூர‌திருஷ்டி
தூர‌திருஷ்டி, தூர‌சிர‌வ‌ண‌ம், தொலைவினுண‌ர்த‌ல் ப‌ற்றிய‌ கோட்பாடுக‌ளும் அவ‌ற்றை எப்ப‌டி எம்மில் வ‌ள‌ர்த்துக்கொள்வ‌து

பாடம்: 07 ம‌னித‌ காந்த‌ம்

ம‌னித‌ காந்த‌ம், பிராண‌ ச‌க்தி, அவ‌ற்றின் த‌ன்மைக‌ளும் ப‌ய‌ன்பாடும், அவ‌ற்றை வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சிக‌ளும் பிர‌யோக‌ முறைக‌ளும்.

பாட‌ம்: 08 சூட்சும‌ சிகிச்சா முறைக‌ள்
சூட்சும‌ சிகிச்சை, ஆன்ம‌ சிகிச்சை, மான‌ச‌ சிகிச்சை, பிராண‌ சிகிச்சைக‌ளின் கோட்பாடும் பிர‌யோக‌ முறைக‌ளும்

பாட‌ம்: 09 ம‌னோவ‌சிய‌ம் அல்ல‌து ம‌ன‌ ஆற்ற‌ல் மூல‌ம் ம‌ற்ற‌வ‌ரை வ‌ச‌ப்ப‌டுத்துத‌ல்
ம‌னோவ‌சிய‌ம், வ‌சீக‌ர‌ காந்த‌சக்தி, ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் மான‌சீக‌ தாக்குத‌ல்க‌ளை த‌டுக்கும் முறைக‌ள், இந்த‌ ஆற்ற‌லை த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் ஏற்ப‌டும் விளைவுக‌ள்,

பாட‌ம்: 10 சூஷ்ம‌ உல‌க‌ம்
சூஷ்ம‌ உல‌க‌ம், அத‌ன் அமைப்பு, எம‌து சூஷ்ம‌ உட‌ல், சூஷ்ம‌ ச‌க்திக‌ளின் உத‌வி பெற‌ல்

பாட‌ம்: 11 உட‌லிற்கு அப்பால்
ம‌னித‌ உட‌லிலிருந்து உயிர்பிரிந்து இற‌ப்பின் பின் ந‌டைபெறுவ‌து என்ன‌?

பாட‌ம்: 12 ஆன்ம‌ ப‌ரிணாம‌ம்
ஆன்மாவின் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி, எப்ப‌டி வ‌ள‌ர்கிற‌து, அத‌ன் நோக்க‌ம், அத‌ன் இல‌க்கு

பாட‌ம்: 13 ஆன்மீக‌த்தில் கார‌ண‌ காரிய‌ தொட‌ர்பு
வாழ்க்கையில் ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கான‌ கார‌ண‌ காரிய‌த்தொட‌ர்புக‌ள், வினைக‌ளை விதைத்த‌லும் அவ‌ற்றை அறுத்த‌லிற்கான‌ கோட்பாட்டு விள‌க்க‌ம்,

பாட‌ம்: 14 யோக‌ப்பாதையில் இல‌க்கினை அடைத‌ல்
மூன்று ம‌டிப்புட‌ன் கூடிய‌ முறை (ச‌ரியான‌ முறை, திசை, திட்ட‌ம், சாதனை செய்ய விரும்பும் மாணவர்களுக்கான உப‌தேச‌ங்க‌ளும் ஆர்வ‌மூட்ட‌லும்.

ஸத் குரு பாதம் போற்றி!
குருவானவர் எம்மை சரியான வழியில் நடாத்திச் செல்வாராக!

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

Gayathri Devi
காயத்ரி தேவி
 நண்பர்களுக்கு

கொழும்பில் வாழும் உயர்திரு.சுமணன் என்கிற மகாப்பெரியவர் தமது சித்த வித்யா விஞ்ஞானம் என்ற வலைப்பூவில் தொடர்ந்து சித்தர்களது வித்தைகள் பற்றியும் பலப்பல ஆன்மிக ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்பாடங்கள் தமிழ் தெரிந்த அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு  அவர்களது மேலான அனுமதியுடன் அவரது வலைப்பூவில் வெளியிட்ட சித்த வித்யா பாடங்களை நமது வலைப்பூவில் வெளியிட இருக்கிறோம்.

அப்பெரியவருடைய வலைப்பூ முகவரி http://yogicpsychology-research.blogspot.in/

ஆன்மிகம், சித்தர்கள் மற்றும் அவர்களது சித்து முறைகள், சித்த பாடங்கள் போன்றவற்றில் அவர் கூறிய அரிய தகவல்களை நாம் நம் தளத்தில் காண்போம்.

மேலும் பல தகவல்கள் வேண்டுவாயின் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் உயர்திரு.சுமணன் அவர்களை அணுகுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இ-மெயில் முகவரி : sithhavidya@gmail.com.

மக்கள் இந்த முறைகளை பின்பற்றி ஆன்மிக வாழ்வில் முன்னேற எல்லாம் வல்ல குருவை பிரார்த்திக்கிறோம்.

ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ;

Pinned Notes

பொதிகைமலைப் பயணம் 2016

**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது.  வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...