பாம்பாட்டிச் சித்தர் திருக்கோகர்ணத்தில் கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். ‘ஜோகி’ என்னும் பிரிவைச் சார்ந்தவர். இவர் பாம்பாட்டிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.
இவருக்கு பாம்பைப் பிடிப்பதுதான் தொழில். அதனைப் படம் எடுத்து ஆட வைப்பது மற்றும் அதன் விஷத்தைச் சேகரித்து, அதனை விற்பதே அவருடைய தொழிலாக இருந்துள்ளது. இவர் பல்வேறு வகையான விஷப் பாம்புகளையும் பிடித்து அதனைக் கேட்பவர்களிடம் விற்று வந்துள்ளார்.
இவருடைய தொழிலே விஷப் பாம்புகளைப் பிடிப்பது என்பதாகையால், அதனால் ஏற்படும் விஷத்தைப் போக்குவதற்காக, பாம்புக்கடி, தேள்கடி மற்றும் பல்வேறு வகையான ஜந்துக்களால் ஏற்படும் விஷக்கடியைப் போக்குவதற்காக, விஷமுறிவு மூலிகைகளையும் தெரிந்து வைத்திருந்தார்.
இவர் இருந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏதேனும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டால், இவரிடம் வந்து வைத்தியம் செய்து கொண்டுள்ளனர். இதனால் இவர் வைத்தியராகவும் இருந்துள்ளார். இதனால் இவருக்கு பல மருத்துவர்களின் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர் தம் குடியிருப்பு பகுதியிலேயே ஒரு வைத்திய ஆராய்ச்சிக் கூடத்தையும் நிறுவி, அங்கு மருத்துவ ஆராய்ச்சியும் செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
நவரத்தினப் பாம்பு:
ஒரு சமயம், அங்கிருந்த வைத்தியர்கள் சிலர், மருதமலைப் பகுதியில் நவரத்தினப் பாம்பு இருப்பதாகவும், அதன் தலையில் பளபளப்பான, பிரகாசம் மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைக் கொண்டு பல்வேறு சித்து வேலைகள் செய்யலாம் என்றும் கூறினர். மேலும் அந்தப் பாம்பு இரவில்தான் இரை தேடி வெளியில் வரும் என்றும், அதைக் கொண்டு வந்து தந்தால், இவருக்கு சன்மானம் தருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அதனைப் பிடிப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
எனவே பாம்பாட்டியார் அந்தப் பாம்பைப் பிடிப்பதற்காக, மிகவும் ஆர்வமுடன் இரவு பகலாக, காடு மேடுகளையே சுற்றிச் சுற்றி வந்தார். எப்படியும் அந்தப் பாம்பைப் பிடித்து விடுவது என்று மிகவும் தீவிரமாக இருந்தார். ஒரு சிறு பாம்புப் புற்றைப் பார்த்தால் கூட, அதனை இடித்து அதனுள் அந்தப் பாம்பு இருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத் தொடங்கினார்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் குறைந்தது. மேலும் இவரின் தீவிர தேடுதலால், மற்ற பாம்புகளும் தங்களின் வளைக்குள் பதுங்கத் தொடங்கின. இவ்வாறு இருந்த போதிலும், அவருக்கு நவரத்தினப் பாம்பைப் பிடிப்பதில் இருந்த ஆர்வம் சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. அதன் மீதிருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இவ்வாறிருக்கையில், எந்தப் பாம்பையும் பார்க்க முடியவில்லையே என்று அவர் மிகவும் சோர்வாக மருதமலைக் காட்டைச் சுற்றி வந்தபொழுது, ஒருநாள் பாம்பாட்டியார் முன்பு, சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், ஒரு பெரிய சிரிப்புடனும் சட்டைமுனிச் சித்தர் நின்றார். அவருடன் பேச விரும்பிய பாம்பாட்டியார், "சுவாமி தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு என்ன செய்கிறீர்கள்? தங்களை இதற்கு முன்பு இங்கு பார்க்கவில்லையே?" என்று கேட்டார்.
அதற்கு சட்டைமுனி, "நான் காட்டில் வசிப்பவன். நான் உன்னைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை நீ என்னைப் பார்த்து கேட்கிறாயா?" என்று சொன்னார்.
அதற்கு பாம்பாட்டியார், "நான் ஒரு பாம்பாட்டி. பாம்புகளைப் பிடிப்பது, அதன் விஷத்தை எடுத்து விற்பது, பின் அதனை ஆட்டுவிப்பதுதான் என்னுடைய தொழில். இக்காட்டில் நவரத்தினப் பாம்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதனுடைய தலையில் மிகவும் ஒளி பொருந்திய அபூர்வமான மாணிக்கம் ஒன்று இருப்பதாகவும் கேள்விப்பட்டு அதனைப் பிடிக்க வந்தேன்" என்றார்.
உடனே சட்டை முனி, "பிடித்து விட்டாயா?" என்று கேட்டார்.
பாம்பாட்டியார், "இந்தக் காட்டில் பாம்புகளே இல்லையெனும்படியாக ஒரு பாம்பைக் கூடக் காணவில்லை. தற்சமயம் இங்கிருக்கும் பாம்புப் புற்றை உடைக்க இருந்தபோது, தாங்கள் வந்து என் காரியத்தைக் கெடுத்து விட்டீர்கள்" என்று கூறினார்.
சட்டைமுனி, "அப்பா, நீ செய்வதோ பயனற்ற செயல். அவ்வாறிருக்க நான் வந்து எவ்வாறு காரியத்தைக் கெடுத்துவிட முடியும்?" என்று கேட்டார்.
உடனே பாம்பாட்டியார், "நான் செய்வது பயனற்ற செயலா? எவ்வாறாயினும் அந்த நவரத்தினப் பாம்பைப் பிடிக்காமல் விடமாட்டேன்" என்று கூறினார்.
உடனே சட்டைமுனிச் சித்தர், "உன்னிடமே நவரத்தினப் பாம்பை வைத்துக் கொண்டு வெளியில் தேடுகிறாயே? காட்டில் அலைந்து திரியும் பாம்புகளைப் பிடித்து ஆட்டுவிக்கிறேன் என்று சொல்கிறாயே, உன்னிடமுள்ள பாம்பைப் பிடித்து உன்னால் ஆட்டுவிக்க முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு பாம்பாட்டியார், "என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்னிடமே நவரத்தினப் பாம்பு உள்ளதா? அதனை என்னால் பிடிக்க முடியுமா? பிடித்து ஆட்டி வைக்கவும் முடியுமா? அவ்வாறு ஆட்டி வைக்க முடியுமென்றால், அதனைப் பிடித்து ஆட்டி வைக்கும் முறையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். இதனை இந்நாள் வரையிலும் எனக்கு யாருமே சொல்லவில்லையே" என்று வருத்தமுடன் கூறினார்.
"உன்னிடமுள்ள நவரத்தினப் பாம்பிற்கு குண்டலினி என்று பெயர். அது ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. அதனை ஆட்டி வைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அதனை அடக்கி வைக்கத் தெரிந்து விட்டால் அட்டமா சித்துகளையும் அடைந்திடலாம். அதனை ஆட்டுவிக்கத் தெரிந்தவனே ஞானி.
அந்தப் பாம்பானது, கரு வீட்டுக்கும், எரு வீட்டுக்கும் இடையில் சுருண்டு படுத்துள்ளது. அதனை எழுப்புவதென்பது ஒரு கடினமான செயல். நீ உன்னை அறிந்து, உன் புருவ மத்தியின் நடுவில், சிவனின் இருப்பிடத்தில் உன் சித்தத்தை அடக்கி அதனைத் தட்டி எழுப்புவாயாக" என்று சட்டைமுனிச் சித்தர் அருளினார்.
மேலும் அவர், நீ பாம்பைப் பிடித்து ஆட்டுவித்ததினால், முதலிலேயே பாம்பாட்டியார் என அழைக்கப்பட்டாய். இப்போழுதும் குண்டலினி எனும் பாம்பை அடக்கப் போவதால், உன்னை அனைவரும் பாம்பாட்டிச் சித்தர் எனப் போற்றுவர் எனவும் வாழ்த்தி அங்கிருந்து மறைந்தார்.
அது முதல் பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனிச் சித்தரை தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டு, அங்கிருந்த ஒரு அரச மரத்தினடியில் அமர்ந்து, தன் சித்தத்தை ஸ்திரமாக்கி, தன்னிடமிருந்த குண்டலினி எனும் பாம்பை எழுப்பி, அட்டமா சித்திகளும் கைவரப் பெற்று, சித்தர்கள் வரிசையில் இடம் பெற்றார்.
அதன்பின், ஆகாய மார்க்கமாக பல நாடுகளுக்கும் சென்று, மக்களுக்கு கடைத்தேறும் மார்க்கங்களைக் காட்டி அருளினார். அவர் மக்களுக்கு பல்வேறு வகையான மருத்துவக் குறிப்புகளையும் பாட்டாக எழுதியுள்ளார். அப்பாடல்கள், "சித்தர் பாடல்கள்" வரிசையில் இடம் பெற்றுள்ளன.
அவர் தம் பாட்டின் முடிவில், "ஆடு பாம்பே" என்று குறிப்பிடுவார். வெளித்தோற்றத்தில் அவர் வெளியில் அலைந்து திரியும் பாம்புகளைப் பற்றிக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும், இறுதியில் உட்பொருளாக அவருடைய ஒவ்வொரு பாடலும், நம் உடலுக்குள் சூட்சுமமாக இருக்கும் குண்டலினி எனும் பாம்பைக் குறிப்பிடுவதையே காணலாம். அவரின் ஒவ்வொரு பாடலும் ஆழ்ந்த உட்பொருளை உடையதாகவே உள்ளது.
இவ்வாறு அவர் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் பல்வேறு மக்களுக்கு அருளையும், கர்ம வினைகளால் வாடியவர்களுக்கு இரசவாதம் எனும் இரும்பைத் தங்கமாக்குதல் மூலமாகவும், சாதாரணக் கற்களை நவரத்தினங்களாக மாற்றியும் அவர்தம் வறுமைநிலை நீக்கியும் உள்ளார்.
அவர் பல்வேறு வகையான மருத்துவ நூல்கள், பிற நூல்களை இயற்றியுள்ளதாகவும் தெரிகிறது.
பாம்பாட்டிச் சித்தர் இறுதியாக "மருத மலை"யிலும், சங்கரன் கோயிலுக்கருகே உள்ள "பாம்புக் கோயில்" என்ற இடத்திலும் சமாதியானதாகக் கூறுவர். சித்தர்கள் பலமுறை, பல அவதாரங்கள் எடுத்து, பலப்பல இடங்களில் அவர்கள் விரும்பும் வகையில் சமாதியாகும் தன்மை படைத்தவர்கள். போகர், திருமூலர் ஆகியோர் 2, 3 இடங்களில் சமாதி நிலையை அடைந்ததாகக் கூறுவர்.